×

கைதிகளுக்கு பற்கள் பிடுங்கிய விவகாரம் ஏஎஸ்பி பல்வீர்சிங் உள்பட 15 போலீசாருக்கு ஜாமீன்: 1000 பக்க குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்

நெல்லை: விசாரணை கைதிகளின் பற்கள் பிடுங்கிய விவகாரத்தில் நெல்லை கோர்ட்டில் ஆஜரான ஏஎஸ்பி பல்வீர்சிங் உள்பட 15 பேருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டது. அவர்களுக்கு 1000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை நகலும் வழங்கப்பட்டது. நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம் காவல் நிலையங்களில் வழக்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்டவர்களின் பற்களை பிடுங்கியதாக புகார்கள் எழுந்தன. நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவின்படி சேரன்மகாதேவி சப் கலெக்டர் முகமது ஷபீர்ஆலம் கடந்த மார்ச் 26ம் தேதி விசாரணை நடத்தினார்.

இதையடுத்து மார்ச் 29ம் தேதி அப்போதைய அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி பல்வீர் சிங் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் சப்-கலெக்டர் முகமது ஷபீர் ஆலம் இடைக்கால அறிக்கையை சமர்ப்பித்தார். இந்நிலையில், இந்த வழக்கை விசாரிக்க தமிழக அரசால் அமைக்கப்பட்ட மூத்த ஐஏஎஸ் அதிகாரி அமுதா கடந்த ஏப்ரல் மாதம் 10ம் தேதி தனது முதல் கட்ட விசாரணையும், 17 மற்றும் 18 ம் தேதிகளில் இரண்டாம் கட்ட விசாரணையும் நடத்தி அறிக்கையை சமர்ப்பித்தார்.
இதையடுத்து இந்த வழக்கு நெல்லை மாவட்ட சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

இதில் வேதநாராயணன், சூர்யா, வெங்கடேசன் மற்றும் அருண்குமார் ஆகியோரின் புகார்களின் அடிப்படையில் ஏஎஸ்பி பல்வீர் சிங், இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி, எஸ்ஐ முருகேஷ், காவலர்கள் இசக்கி ராஜா, கார்த்திக், சதாம் உசேன், ராஜ்குமார், ஆபிரகாம் ஜோசப், ராமலிங்கம், சுடலை, விக்னேஷ், முத்து செல்வகுமார், சந்தனகுமார், மணிகண்டன் மற்றும் விவேக் ஆண்ட்ரூஸ் ஆகியோர் மீது சிபிசிஐடி போலீசார் நெல்லை முதலாவது ஜேஎம் கோர்ட்டில் 1000க்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.

இந்த நான்கு வழக்குகள் நெல்லை மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. இதில் ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங் உள்ளிட்ட காவல்துறையை சேர்ந்த 15 பேரும் ஜேஎம் 1 வது கோர்ட்டில் மாஜிஸ்திரேட் திரிவேணி முன்னிலையில் ஆஜராகினர். வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் திரிவேணி ஏஎஸ்பி உட்பட 15 பேருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அவர்கள் 15 பேருக்கும் 1000க்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை நகல்கள் வழங்கப்பட்டன. இந்த வழக்கு விசாரணை வருகிற 26ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

* வழக்கை டெல்லிக்கு மாற்ற வேண்டும்
இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் ஆஜரான வக்கீல் மகாராஜன், வக்கீல் மாடசாமி ஆகியோர் கூறுகையில், ‘இந்த வழக்கு விசாரணை நேர்மையாக நடக்க வேண்டும் என்றால் வெளிமாநில நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும். தற்போது 15 பேருக்கும் வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யவேண்டும். இந்த வழக்கு நேர்மையாக நடக்கும் என்ற நம்பிக்கை இல்லை. எனவே இந்த வழக்கு விசாரணையை டெல்லிக்கு மாற்ற நாங்கள் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்ய உள்ளோம்’ என்றனர்.

The post கைதிகளுக்கு பற்கள் பிடுங்கிய விவகாரம் ஏஎஸ்பி பல்வீர்சிங் உள்பட 15 போலீசாருக்கு ஜாமீன்: 1000 பக்க குற்றப்பத்திரிகை நகல் வழங்கல் appeared first on Dinakaran.

Tags : ASP ,Balveersingh ,Nellai ,
× RELATED நெல்லை ஆட்சியர் அலுவலக வளாகத்தில்...